இந்தியத் திரையுலகின் முன்னணிப் பின்னணிப் பாடகரான அர்ஜித் சிங், இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகத் திரையிசை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள அவர், இந்தி பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றார்.
மேலும் தமிழில் ஏ.ஆர். ரகுமான் இசையில் சூர்யாவின் ’24’ படத்தில் இவர் பாடிய ‘நான் உன் அருகினிலே’ என்ற பாடல் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ள அர்ஜித் சிங், தற்போது தனது இசைப் பயணத்தில் ஒரு புதிய மாற்றத்தை விரும்புகிறார்.
அதனை தொடர்ந்து ஒரே மாதிரியான திரையிசைப் பாடல்களைப் பாடுவதில் தமக்கு சலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இசையின் புதிய பரிமாணங்களை ஆராய வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் அர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விலகினாலும், இசையைத் தாம் கைவிடப்போவதில்லை என்றும், இனி ஒரு தனித்துவமான கலைஞனாக இயங்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறிப்பாக இந்திய பாரம்பரிய இசை மற்றும் சுயாதீன இசை ஆல்பங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும், திரையுலகிற்குத் தொடர்ந்து இசையமைப்பாளர் பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
