காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி – கனிமொழி சந்திப்பை “காங்கிரஸ் கெஞ்சுகிறது” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்துக் கேட்டபோது, “இரு தலைவர்கள் சந்தித்துப் பேசுவது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது குறித்த கேள்விக்கு, இதுபற்றி இரு கட்சித் தலைமைகளும் பேசி முடிவு செய்வார்கள், யாரும் பதற்றப்படத் தேவையில்லை என்று விளக்கமளித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசிய அவர், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது ஆசையை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார். இதன் மூலம் கூட்டணி மற்றும் ஆட்சிப் பங்கு குறித்த விவாதங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.
