மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் லியு சூக்ஸி (Liu Chuxi), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கார் விபத்தில் சிக்கினான். இதில் அவனது மூளை மற்றும் நுரையீரலில் பலத்த காயம் ஏற்பட்டு, அவன் கோமா நிலைக்குச் சென்றான். 55 நாட்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அவன் உயிர் பிழைக்க வாய்ப்பு மிகக் குறைவு என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

ஆனால், அவனது தாய் நம்பிக்கையைக் கைவிடவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சிறுவனுக்குப் பிடித்த ஒலிகளை அவன் காதில் ஒலிக்கச் செய்தார். சிறுவனின் பள்ளியில் ஒலிக்கும் காலை உடற்பயிற்சி இசை மற்றும் வகுப்பாசிரியரின் கணிதப் பாடங்களைப் படுக்கை அருகே ஒலிக்கச் செய்தனர்.

இதற்கிடையில், அவனது நண்பர்களும் ஆசிரியரும் சேர்ந்து உருக்கமான வீடியோ செய்திகளை அனுப்பினர். “சூக்ஸி, சீக்கிரம் எழுந்து வா.. நாம எல்லாரும் சேர்ந்து ஃபுட்பால் விளையாடலாம்”, “உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்.. கண்ணைத் திறந்து பாருடா” என நண்பர்கள் கொஞ்சலாகவும், பாசமாகவும் பேசிய வீடியோக்கள் அவனது காதில் ஒலிக்கப்பட்டன.

நட்பின் குரலும், பள்ளியின் இசையும் அந்தச் சிறுவனின் மூளையைத் தூண்டியது. 45-வது நாளில் இமைகள் துடிக்கத் தொடங்கின. 55-வது நாளில் அவன் முழுமையாகக் கண்ணைத் திறந்து கையை அசைத்தான்.

அவனைப் பார்க்க வந்த ஆசிரியர், “உனக்கு இனி ஹோம்வொர்க் கிடையாது” என்று ஜாலியாகச் சொன்னதும், அந்தச் சிறுவன் சந்தோஷமாகச் சிரித்தபடியே கையசைத்தது அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் நனைய வைத்தது.