2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய இராணுவ பல தரவரிசையில் பாகிஸ்தான் கடும் சரிவைச் சந்தித்து 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023-ல் 7-வது இடத்தில் இருந்த அந்த நாடு, பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கடன்காரணமாகத் தனது இராணுவ நவீனமயமாக்கல் பணிகளில் சுணக்கத்தைக் கண்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதத் திறனில் தொடர்ந்து முதல் நான்கு இடங்களைத் தக்கவைத்துள்ள நிலையில், பாகிஸ்தானால் போதிய பாதுகாப்பு பட்ஜெட் ஒதுக்க முடியாதது மற்றும் காலாவதியான போர் தளவாடங்களை மாற்ற இயலாதது அந்த நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த வீழ்ச்சிக்கு அதன் பலவீனமான பொருளாதார நிலை மட்டுமின்றி, உள்நாட்டுப் பாதுகாப்பு சவால்களும் முக்கியக் காரணங்களாக உள்ளன. பலுசிஸ்தான் போன்ற பகுதிகளில் நிலவும் பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் இராணுவத்தின் பெரும் பகுதி கவனம் செலுத்துவதால், வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், இந்தியா உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் அசுர வளர்ச்சி கண்டுவருவது பாகிஸ்தானுக்கான சவாலை அதிகரித்துள்ளது. முறையான பொருளாதார நிலைத்தன்மை இல்லாததே அந்த நாட்டின் இராணுவ வலிமை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.