குஜராத் மாநிலத்தில் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த இந்த தம்பதியினரில், கணவர் மும்பையில் வேலை பார்த்துவிட்டு மாதம் ஒருமுறை சூரத்திற்கு வருவது வழக்கம்.

அப்போது அவர் பாலியல் உணர்வைத் தூண்டும் மருந்துகளை உட்கொண்டு, தனது மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார்.

கணவரின் அத்துமீறிய செயலால் அந்தப் பெண் உடல்ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ரத்தப்போக்கு ஏற்படும் அளவிற்குத் துன்புறுத்தப்பட்டுள்ளார். இந்த நரக வாழ்க்கையிலிருந்து தப்பிக்க, தனது கணவரைத் தீர்த்துக்கட்ட அந்தப் பெண் முடிவு செய்துள்ளார்.

ஜனவரி 1-ஆம் தேதி பாலில் எலி மருந்து கலந்து கொடுத்தும் கணவர் உயிரிழக்காததால், ஜனவரி 5-ஆம் தேதி அவர் உடல்நலம் குன்றியிருந்த சமயம் பார்த்து கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

பின்னர் இது இயற்கையான மரணம் என நாடகமாடியுள்ளார். ஆனால், உடலை பீகாருக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும் என கணவரின் சகோதரர் வற்புறுத்தியதும், அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உடற்கூறாய்வு அறிக்கையில் விஷம் கொடுத்ததும், கழுத்தை நெரித்ததும் உறுதியான நிலையில், போலீசாரின் விசாரணையில் அந்தப் பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.