சமூக வலைத்தளங்களில் இப்போது ஒரு விசித்திரமான வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அமெரிக்க குடிமக்கள் பலர் தங்கள் பாஸ்போர்ட்டை நெற்றியில் டேப் போட்டு ஒட்டிக்கொண்டு பொது இடங்களில் சுற்றித் திரிகிறார்கள். “எங்களிடம் வந்து நீங்கள் அமெரிக்க குடிமகனா என்று கேட்கும் முன்பே, இதோ ஆதாரம்” என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த மக்கள். டிக்டாக்கில் மட்டும் இந்த வீடியோ 70 லட்சம் முறையாவது பார்க்கப்பட்டுள்ளது



​விளையாட்டுக்காக இதைச் செய்கிறார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. அமெரிக்காவின் குடிவரவுத் துறை (ICE) சமீபகாலமாக நடத்தி வரும் அதிரடி சோதனைகளும், கைதுகளுமே இதற்குக் காரணம். குறிப்பாக மினியாபோலிஸ் பகுதியில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததும், 2 வயதுக் குழந்தை காவலில் எடுக்கப்பட்டதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் இந்த நாட்டுக்காரர்கள்தான், எங்களை அனாவசியமாகத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று காட்டவே இந்த நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.