மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் ஒருவரை சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்துள்ளனர். மருத்துவமனை வாசலை அடைந்தபோது, ஆம்புலன்ஸின் பின்பக்கக் கதவு எதிர்பாராதவிதமாகப் பழுதடைந்து சிக்கிக்கொண்டது.
கதவைத் திறக்க நீண்ட நேரம் போராடியும் பலன் கிடைக்காததால், இறுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கதவைத் திறந்துள்ளார்.
இந்த நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முதியவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சரியான நேரத்தில் கதவு திறக்கப்படாததே உயிரிழப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அந்த முதியவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மாவட்ட சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
