சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரப்பப்படும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் ட்ரோல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் இவர், அண்மைக்காலமாகத் தன்னை நோக்கி வரும் விமர்சனங்கள் குறித்துப் பேசுகையில், “என் மீது சுமத்தப்படும் பொய்களுக்கு நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? அப்படி விளக்கம் அளிப்பது வதந்திகளைப் பரப்புவோரை மேலும் ஊக்குவிப்பது போலாகிவிடும்.

இதனால் முகம் தெரியாத நபர்களின் கருத்துகளுக்குப் பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். மேலும், சிலர் பணத்திற்காகவே இது போன்ற தவறான பிரசாரங்களை மேற்கொள்வதாகச் சாடியுள்ள ராஷ்மிகா, தான் திரையுலகிற்கு வந்தபோது இருந்த அதே நேர்மையுடன் இன்றும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்கள் தங்களுக்குப் பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புவதால், பொய்களைப் பரப்புவோர் தொடர்ந்து அதைச் செய்துகொண்டே தான் இருப்பார்கள் என்றும், அதற்குப் பதில் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தனது நடிப்புத் தொழிலில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்த ராஷ்மிகாவின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.