கணவர் யாருடன் இருக்க வேண்டும் என்பதில் இரு மனைவிகளிடையே ஏற்பட்ட மோதலைத் தீர்க்க, வாரத்தின் நாட்களைப் பிரித்து வழங்கி உத்தரப்பிரதேச பஞ்சாயத்து வினோத தீர்ப்பளித்துள்ளது. அதாவது அந்த  கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக அவர் காதல் திருமணம் செய்துகொண்டார். “கணவர் எனக்கே சொந்தம்” என்று கூறி இரு மனைவிகளும் தினமும் சண்டையிட்டு வந்தனர்.

இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்ய முயன்றனர். இறுதியில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கிராமப் பெரியவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பஞ்சாயத்தில், கணவரை இருவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, வாரத்தின் முதல் மூன்று நாட்களான திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் கணவர் தனது முதல் மனைவியுடன் வசிக்க வேண்டும். அடுத்த மூன்று நாட்களான வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டாவது மனைவியுடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும், கணவர் தனது விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வினோத ‘டைம் டேபிள்’ ஒப்பந்தத்தை கணவர் மற்றும் இரு மனைவிகளும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். தற்போது இந்த வினோத சமாதான ஒப்பந்தம் அந்தப் பகுதி முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.