ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் சிட்டி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலுக்கு அடியில் விழவிருந்த 12 வயது சிறுமியைத் தனது உயிரைப் பணைய வைத்து காப்பாற்றிய காவலரின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. கங்காபூர் சிட்டி சந்திப்பில் டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டபோது, ஆராத்யா என்ற சிறுமி ரயிலில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் நழுவியதில், நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே இருந்த இடைவெளியில் அவர் தவறி விழப் பார்த்தார். அந்த நேரத்தில் அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ராம்கேஷ் மீனா, மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிறுமியை இழுத்து நடைமேடைக்குக் கொண்டு வந்து காப்பாற்றினார்.

“>

இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் காவலர் ராம்கேஷ் மீனாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டாலும், சிறுமி எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். காவலரின் இந்தச் சாமர்த்தியமான மற்றும் வீரமான செயலைக் கண்டு அங்கிருந்த பயணிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் ஒருவேளை காவலர் சிறிதளவு தாமதித்திருந்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடமை தவறாத காவலர் ராம்கேஷ் மீனாவிற்கு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்கள் வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்து வருகின்றனர்.