2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்குப் போட்டியாகத் தவெக உருவெடுத்துள்ள நிலையில், இதுவரை விஜய்யை நேரடியாக விமர்சிக்காத அதிமுக மற்றும் அதன் கூட்டணித் தலைவர்கள் தற்போது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என்று விஜய் விமர்சித்ததைக் கண்டித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சினிமாவில் டபுள் ரோல் நடிப்பது போல விஜய் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார்; நாங்கள் எல்லாம் வெகுண்டெழுந்தால் நிலைமை தப்பாகிவிடும்” என்று தேனியில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்று சாடிய தினகரன், “முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து ஊடகங்களைச் சந்திக்கச் சொல்லுங்கள்; சினிமாவில் பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாதவர் ஊழலை ஒழிக்கப் போகிறாரா?” என்று விஜய்யைக் கடுமையாகக் கேலி செய்தார்.
2006-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல விஜய்யும் சில வாக்கு சதவீதத்தைப் பெறலாம் என்று தான் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒருபோதும் விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிடவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
