மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராகப் போகும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் பல தலைவர்களைப் பார்த்திருப்பதாகவும், ஆனால் விஜய் மக்களுக்காக 1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பது இந்திய வரலாற்றிலேயே யாருக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு என்றும் அவர் புகழ்ந்து பேசினார்.
மேலும், விஜய்யின் செல்வாக்கைக் கண்டு மற்ற கட்சிகளின் தலைவர்கள் தற்போது ஆடிப்போய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வரும் மற்ற கட்சிகளைப் போலல்லாமல், தவெக கூட்டத்திற்குத் தொண்டர்கள் தானாகவே திரண்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
திமுக மற்றும் அதிமுக எனப் பெரிய கூட்டணிகளாக இருந்தாலும், அந்தச் சக்திகளைத் தூள் தூளாக்கும் ஆற்றல் விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றும், அவரை முதலமைச்சராக்கத் தமிழக மக்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் பேசினார்.
மற்ற கட்சிகளின் தலைமை ஆட்டம் கண்டுள்ள நிலையில், தவெக-வின் எழுச்சியை இனி எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அவர் தொண்டர்களிடையே உற்சாகமாகத் தெரிவித்தார்.
கட்சிக்குக் கிடைத்துள்ள ‘விசில்’ சின்னத்தைப் பயன்படுத்துவதில் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் அறிவுறுத்தினார். பொது இடங்களில் வயதானவர்கள் அல்லது தூங்கிக் கொண்டிருப்பவர்கள் அருகே திடீரென விசில் அடித்து அவர்களை முகம் சுளிக்க வைக்க வேண்டாம் என்றும், மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால் அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மக்களின் அன்பைப் பெற்று, வரும் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
