மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், அலைகள் தாலாட்டும் கடற்கரைக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது பழமை வாய்ந்த மாசிலாமணி நாதர் கோயில். இந்த ஆலயத்தின் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், கோயிலுக்கு வெளியே கடற்கரை காற்று சவுக்கடி கொடுப்பது போல பலமாக வீசினாலும், கோயிலின் உள்ளே மட்டும் ஒரு சிறு தென்றல் கூட வீசுவதில்லை. இதை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில், அவர் ஒரு அகல் விளக்கை ஏற்றி கையில் ஏந்தியபடி கோயிலின் உட்புறம் நிற்கிறார். சுற்றிலும் கடல் காற்று ஆக்ரோஷமாக வீசும் சூழலிலும், கோயிலின் உள்ளே அந்த விளக்கின் சுடர் ஒரு நூல் அளவு கூட அசையாமல், அப்படியே சிலையாக எரிகிறது. இது பார்ப்பவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
அந்த இளைஞர் மெதுவாக நடந்து வந்து கோயிலின் நுழைவு வாயிலைத் தாண்டி, தனது காலை ஒரே ஒரு அடி மட்டும் வெளியே வைக்கிறார். அடுத்த நொடியே, வெளியே வீசும் காற்றின் வேகம் அந்த அகல் விளக்கின் சுடரைச் சட்டென அணைத்து விடுகிறது. மீண்டும் அவர் கோயிலுக்குள் சென்று விளக்கை ஏற்றினால் அது அமைதியாக எரிகிறது. “காற்று புகா அறை” போன்ற ஒரு நுட்பமான கட்டிடக்கலை அதிசயத்தை 700 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இங்கே சாத்தியமாக்கியுள்ளனர். புயல் காலங்களிலும், சுனாமி வந்தபோதுமே கூட கோயிலின் இந்த அமைதி மாறவில்லை என்பதுதான் ஆன்மீகத்தையும் தாண்டிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மர்மமாக இன்றும் நீடிக்கிறது.
