செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்றைய கூட்டத்தில் பிரதமர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

காலையிலிருந்தே சூரியன் மறைந்து மேகமூட்டமாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இயற்கையே தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறியது போலவே 2026-ல் தி.மு.க. இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் பலமாக உள்ளதாகத் தெரிவித்த தமிழிசை, வரும் காலங்களில் இன்னும் சில கட்சிகள் இணைந்தால் அது கூடுதல் பலமாக அமையும் என்றார்.

கூட்டணியில் உள்ள தலைவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பு இருப்பதாகவும், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் அவர் தனது பேட்டியில் விளக்கமளித்தார்.