டெல்லியில் பூ விற்றுக் கொண்டிருந்த 11 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து காட்டில் வீசிச் சென்ற ஈ-ரிக்ஷா ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

அதாவது கடந்த ஜனவரி 11-ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் 11 வயது சிறுமி ஒருவர் ரோஜா பூக்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஈ-ரிக்ஷாவில் வந்த துர்கேஷ் (40) என்ற நபர், சிறுமியிடம் இருந்த அனைத்து பூக்களையும் விற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது வாகனத்தில் ஏற்றியுள்ளார்.

பின்னர் சிறுமியை ஆள்நடமாட்டமில்லாத வனப்பகுதிக்கு கடத்திச் சென்ற அந்த நபர், அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி மயக்கமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சிறுமி இறந்துவிட்டதாகக் கருதிய துர்கேஷ், அவரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி, மிகுந்த போராட்டத்திற்குப் பின் தனது வீட்டை அடைந்துள்ளார். அவரது நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சிறுமி கடும் அதிர்ச்சியில் இருந்ததால் ஆரம்பத்தில் தகவல்களைச் சேகரிப்பதில் போலீஸாருக்குச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள மற்றும் காடு நோக்கிச் செல்லும் 15-க்கும் மேற்பட்ட சாலைகளில் இருந்த சுமார் 300 சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு காட்சியில், சிறுமி குறிப்பிட்ட ஈ-ரிக்ஷாவில் ஏறுவது பதிவாகியிருந்தது. அதன் பதிவு எண்ணைக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், குற்றவாளியான துர்கேஷை ஒரே நாளில் கைது செய்தனர்.

விசாரணையில், அந்தச் சிறுமியைப் பல நாட்களாகக் கண்காணித்து வந்த துர்கேஷ், திட்டமிட்டே இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து ரத்தக்கறை படிந்த ஆடைகள் உள்ளிட்ட ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்பட்ட நபர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமிக்குத் தீவிர மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.