மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  குவாலியரில் நிஷா  என்பவர் வசித்து வந்தார். இவரது தாயார் சுனிதா, அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் தனது தாயுடன் தொலைபேசியில் பேசிய நிஷா, தான் வீட்டில் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். மாலையில் இருவரும் உறவினர் வீட்டு பூஜைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய தாய் சுனிதா, கதவைத் திறந்து உள்ளே சென்றபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். அங்கு நிஷா ரத்த வெள்ளத்தில் சடலமாகத் தரையில் கிடந்துள்ளார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரத்தக்கறை படிந்த ஒரு தடி மற்றும் கல்லை அங்கிருந்து கைப்பற்றினர்.

கொலை செய்யப்பட்ட நிஷாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது உறுதியாகியுள்ளது. சம்பவத்தின்போது, நிஷாவின் அண்ணி தனது குழந்தைகளுடன் தடுப்பூசி போடுவதற்காக அங்கன்வாடி மையத்திற்குச் சென்றிருந்ததால் நிஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் இது பற்றி போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள்:

மர்ம நபர் வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே குதித்து நுழைந்துள்ளார். நிஷாவை முதலில் பலமாகத் தாக்கிவிட்டு, பின்னர் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். குற்றவாளி வந்த அதே சுவரைத் தாண்டி மீண்டும் தப்பியோடியுள்ளார். அங்கிருந்த கால் தடங்களை தடயவியல் துறையினர் சேகரித்துள்ளனர். மேலும் நிஷாவின் குடும்பத்தாருக்கு யாருடனும் முன்விரோதம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இக்கொலைச் சம்பவத்தை காதல் விவகாரம் உட்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்று காவல் துறையினர் உறுதி அளித்துள்ளனர்.