தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு, கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி ஹைடெக் சிட்டியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். ஆஞ்சநேயுலு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதாலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதாலும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பணக்கஷ்டத்தால் குழந்தைகளின் படிப்பும் நின்றது.
கணவருடன் வாழப் பிடிக்காமல் சரஸ்வதி தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றார். ஆனால், தான் திருந்திவிட்டதாக ஆசை வார்த்தை கூறி ஆஞ்சநேயுலு அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
கடந்த 17-ம் தேதி இரவு வேலை முடிந்து வந்து குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த சரஸ்வதியை, நள்ளிரவில் வீட்டிற்கு வந்த ஆஞ்சநேயுலு ஆத்திரத்தில் பெரிய கல்லால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். அருகில் படுத்திருந்த குழந்தைகளின் உடைகளிலும் இரத்தம் தெறித்துள்ளது.
சத்தம் கேட்டு விழித்த குழந்தைகளிடம், “தாய் தூங்குகிறாள், நீங்களும் தூங்குங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தந்தை மீது சந்தேகம் வந்து குழந்தைகள் விளக்கை போட்டுப் பார்த்தபோது, தாய் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
குழந்தைகள் அளித்த தகவலின் பேரில் உறவினர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். சரஸ்வதியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய ஆஞ்சநேயுலு, “என் உயிரில் பாதியாக இருந்த உன்னை என் கைகளால் கொன்றுவிட்டேனே” என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
