உயிரைக் காக்க வேண்டிய மருத்துவரே, பணத்திற்காகத் தனது ரத்த உறவுகளைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் கர்நாடகாவையே அதிரவைத்துள்ளது.

பத்ராவதியைச் சேர்ந்த தம்பதி சந்திரப்பா (68) மற்றும் ஜெயம்மா (65). இவர்கள் ஜனவரி 20-ஆம் தேதி காலை தங்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

காயங்கள் ஏதும் இல்லாததால் இது இயற்கை மரணம் என முதலில் கருதப்பட்டது. ஆனால், வீட்டில் இருந்த தங்க நகைகள் மாயமானதால் போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது.

விசாரணையில், சந்திரப்பாவின் தம்பி மகனான டாக்டர் மல்லேஷ் என்பவர் தான் இந்தக் கொலையைச் செய்தது அம்பலமானது. ஆயுர்வேத மருத்துவரான மல்லேஷ், கடும் கடன் தொல்லையில் இருந்துள்ளார்.

பெரியப்பாவிடம் 15 லட்சம் ரூபாய் கடன் கேட்டும் அவர் கொடுக்காததால், ஆத்திரத்தில் அவர்களைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். கடந்த 19-ஆம் தேதி மதியம், முழங்கால் வலிக்குச் சிகிச்சை அளிப்பது போல நடித்து, அதிகப்படியான ‘அனஸ்தீசியா’ (மயக்க மருந்து) ஊசியைச் செலுத்தி இருவரையும் துடிக்கத் துடிக்கக் கொன்றுள்ளார்.

பின்னர் நகைகளைத் திருடிச் சென்று அடகு வைத்துத் தனது கடனை அடைத்துள்ளார். 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைப் பிடித்த போலீசார், தற்போது அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.