அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். சமீபகாலமாக அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுகவில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே மருது அழகுராஜ் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியின் மிக முக்கியமான தூணாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் திமுகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



​முன்னதாக, வைத்திலிங்கம் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணையப்போவதாக வதந்திகள் பரவின. ஆனால், அவரே அதை மறுத்திருந்தார். இந்நிலையில், நாளை அவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஓபிஎஸ் அணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.