மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (51). இவரது மகள் கலையரசி (19). இவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். தனது உடல் எடையை குறைக்க விரும்பிய கலையரசி, இதற்கான வழிமுறைகளை சமூக வலைதளமான யூடியூபில் (YouTube) தேடியுள்ளார்.
அப்போது, ‘வெங்காரம்’ சாப்பிட்டால் உடல் எடை விரைவாக குறையும் என்ற வீடியோ ஒன்றை அவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பிய மாணவி, நாட்டு மருந்து கடைக்குச் சென்று வெங்காரம் வாங்கி வந்து உட்கொண்டுள்ளார்.
வெங்காரம் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கலையரசிக்கு கடும் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
இருப்பினும், வீட்டிற்கு வந்த அவருக்கு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அத்துடன் வயிற்றுப்போக்குடன் ரத்தமும் வெளியேறியதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்காரம் என்பது வேதியியல் ரீதியாக சோடியம் டெட்ராபோரேட் (Sodium Tetraborate) என்று அழைக்கப்படும் ஒரு கனிம உப்பு ஆகும். இது குறித்து மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிப்பது: இது தங்கம் உருக்கவும், தொழிற்சாலைகளில் அழுக்கு நீக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் சில மருந்துகளில் மிகக் குறைந்த அளவில், முறையாகச் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படும்.
இதனை நேரடியாக உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது உடலில் நச்சுத்தன்மையை (Toxicity) ஏற்படுத்தும். இதனை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே வாந்தி, வயிற்று வலி ஏற்படும். இது உள் உறுப்புகளை, குறிப்பாகச் சிறுநீரகத்தைச் சிதைத்து உயிரிழப்பை ஏற்படுத்தும். மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலி மருத்துவக் குறிப்புகளை நம்பி, உரிய மருத்துவர் ஆலோசனையின்றி எந்தப் பொருளையும் உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
