சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது பண்ணையில் வளர்க்கும் பன்றிகளை வெட்டுவதற்கு உதவிக்கோரி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு, எதிர்பாராத விதமாக ஒரு பெரும் திருவிழாவாக மாறியுள்ளது.

மேலும் தனது வயதான தந்தையால் இந்த வேலையைச் செய்ய முடியவில்லை என்றும், தமக்கு உதவ வருபவர்களுக்கு பன்றி இறைச்சி சூப் விருந்து அளிக்கப்படும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். ஆனால், அவரது அழைப்பை ஏற்று சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் அந்தப் பண்ணையில் திரண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு வெறும் வேலையாக மட்டும் அமையாமல், அங்கு வந்திருந்தவர்கள் காய்கறிகளை நறுக்குவது, சமைப்பது என அனைத்துப் பணிகளிலும் உற்சாகமாகப் பங்கேற்றனர். இறுதியில் அந்தப் பண்ணையில் ஐந்து பன்றிகள் வெட்டப்பட்டு, அனைவருக்கும் பிரம்மாண்டமான விருந்து அளிக்கப்பட்டது.

இதனால் கட்டுக்கடங்காத கூட்டத்தை ஒழுங்குபடுத்த உள்ளூர் காவல்துறையினரே வரவழைக்கப்பட்டனர். ஒரு சிறிய உதவிக்காகப் பகிரப்பட்ட சமூக வலைத்தளப் பதிவு, ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைத்த ஒரு கொண்டாட்டமாக முடிந்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.