வறுமை ஒருபோதும் சாதனைக்குத் தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நடைபாதை வியாபாரியின் மகன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணிக்குத் தேர்வாகியுள்ளார். மகனின் வெற்றியைக் கேட்டு அந்தத் தாய் ஆனந்தக் கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபால் சாவந்த். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டது. குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காகக் கோபாலின் தாய், பல ஆண்டுகளாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தனது தாய் படும் கஷ்டத்தை உணர்ந்த கோபால், கடினமாக உழைத்துப் படித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேருவதற்கான தேர்வில் வெற்றி பெற்றார்.
महाराष्ट्र: बाजार में सब्जी बेच रही मां को बेटे ने पैरों पर गिरकर दी CRPF जवान बनने की खुशखबरी, जिसने देखा वीडियो वही हुआ भावुक..Show more#CRPF | #ViralVideo | #Maharastra pic.twitter.com/NYEWiSPuwo
— Neha (@Neha_1513) January 19, 2026
தான் சி.ஆர்.பி.எப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியைத் தனது தாயிடம் தெரிவிக்கக் கோபால் அவர் காய்கறி விற்றுக்கொண்டிருந்த இடத்திற்கே நேரடியாகச் சென்றார். தனது மகன் சீருடை அணிந்து ஒரு நிலைக்கு வந்துவிட்டதை அறிந்த அந்தத் தாய், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார். தனது மகனை இறுக்க அணைத்துக் கொண்டு அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி காண்போர் அனைவரையும் நெகிழச் செய்தது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோ, தற்போது வரை 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. பலரும் கோபால் சாவந்தின் விடாமுயற்சியையும், அவரது தாயின் தியாகத்தையும் பாராட்டி வருகின்றனர். மேலும் “கஷ்டப்பட்டு வளர்த்த மகன் ஒரு நிலைக்கு வரும்போது ஒரு தாய்க்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை” என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
