தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் சுமார் 850 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இது குறிப்பாக போகி அன்று ரூ.217 கோடியும், பொங்கல் தினத்தன்று ரூ.301 கோடியும் என முதல் இரண்டு நாட்களிலேயே 518 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு பொங்கல் காலத்தில் சுமார் 725 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்த நிலையில், இந்த ஆண்டு அது 125 கோடி ரூபாய் அதிகரித்து மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மண்டல வாரியான விற்பனைப் பட்டியலில் தலைநகர் சென்னை வழக்கம் போல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 98.75 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ள நிலையில், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் கோவை ஆகிய மண்டலங்களிலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

திருவள்ளுவர் தினத்தன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், அதற்கு முந்தைய நாளே குடிமகன்கள் மதுபானங்களை அதிகளவில் வாங்கி இருப்பு வைத்ததே இந்த அதீத விற்பனைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஒருபுறம் இந்த வருவாய் அரசு கஜானாவிற்கு வலுசேர்த்தாலும், பண்டிகை காலங்களில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.