தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) சுமார் 8 கோடி சந்தாதாரர்கள் பயன்பெறும் வகையில், பி.எப். பணத்தை எடுக்கும் நடைமுறை பெரும் மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது.
தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, வங்கிப் பரிமாற்றம் மூலம் பணம் கிடைக்கச் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ‘யுபிஐ’ (UPI) மூலம் உடனடிப் பணப் பரிமாற்ற வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பி.எப். அமைப்பானது சி-டாக் (C-DAC) மற்றும் என்.பி.சி.ஐ (NPCI) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிய மென்பொருளை உருவாக்கி வருகிறது.
புதிய விதிகளின்படி, உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள தகுதியான தொகையில் 75% வரை (ஆரம்பக்கட்டத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 25,000 வரை இருக்கலாம் எனத் தெரிகிறது) யுபிஐ பின் (PIN) எண்ணைப் பயன்படுத்தி நேரடியாகத் தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
எஞ்சிய 25% தொகை எதிர்கால ஓய்வூதியத் தேவைகளுக்காகக் கணக்கிலேயே இருப்பு வைக்கப்படும். பி.எப். விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் நிர்வாகச் சுமையைக் குறைக்கவும், அவசரத் தேவைக்காக உறுப்பினர்கள் விரைவாகப் பணம் பெறவும் இந்தத் திட்டம் உதவும். முதற்கட்டமாக ‘பீம்’ (BHIM) செயலி மூலம் இந்த வசதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
