கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள இந்திய விளையாட்டு கழக (SAI) விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த கபடி வீராங்கனை சாண்டிரா (18) மற்றும் தடகள வீராங்கனை வைஷ்ணவி (15) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். விடுதியின் மேல் தளத்தில் அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த வைஷ்ணவியின் தந்தை வேணு இதுகுறித்து கூறுகையில், தனது மகள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், முந்தைய நாள் தான் தன்னிடம் மகிழ்ச்சியாகப் பேசி பணம் கேட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தகவல் கிடைத்து தான் அங்கு சென்றபோது அதிகாரிகள் நீண்ட நேரம் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், இந்த மரணத்தில் உரிய விசாரணை வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் சாண்டிராவின் பெற்றோரும், இந்த விடுதி ஒரு சிறைச்சாலை போல இருப்பதாக தங்கள் மகள் அடிக்கடி கூறி வந்ததாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். சாண்டிரா தங்கியிருந்த அறைக்கு பதிலாக வேறு ஒரு அறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கொல்லம் நகர போலீசார் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் உள்ள சக மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
