உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் ஒரு தாய்க்கு ஏற்பட்ட கொடூர அனுபவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. பிருந்தாவனத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவர், தனது 3 குழந்தைகளுடன் ஆக்ரா செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளார். ரயிலுக்காகக் காத்திருந்தபோது, அவரது 3 வயது மகளுக்கு அவசரமாக கழிவறை செல்ல வேண்டியிருந்தது.
இரண்டு மகன்களையும் பிளாட்பாரத்திலேயே விட்டுவிட்டு, மகளை மட்டும் அழைத்துக்கொண்டு ரேஷ்மா கழிவறைக்குச் சென்றார். அந்த சில நிமிட இடைவெளியில், அங்கிருந்த ஒரு மர்ம நபர் ரேஷ்மாவின் 4 வயது மகனைக் கடத்திக்கொண்டு ஆக்ரா நோக்கிச் சென்ற ரயிலில் ஏறித் தப்பிவிட்டார்.
திரும்பி வந்த ரேஷ்மா, தன் மகன் காணாமல் போனதைக் கண்டு அலறித் துடித்தார். உடனடியாக ரயில்வே போலீசார் (GRP & RPF) களத்தில் இறங்கினர்.
சிசிடிவி கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வைத்து 14 மணிநேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ராஜஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரன் பப்லி மாஹோர் என்பவனைப் பிடித்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
