தமிழ் மற்றும் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை வரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் ‘குபேரா’, தான் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ எனப் பல படங்களில் தனுஷ் பிஸியாக இருந்தார். இந்தியில் ‘தேரே இஷ்க் மே’ படத்திலும், தமிழில் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர’ (Kara) படத்திலும் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘கர’ திரைப்படம் தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான ஆக்ஷன் த்ரில்லராக எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் பிஸியான நடிகையாக இருக்கும் மிருணாள் தாகூரும், தனுஷும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற ‘சன் ஆஃப் சர்தார் 2’ பட விழாவில் இருவரும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்த வீடியோக்கள் வெளியாகி, அவர்கள் காதலிப்பதாக வதந்திகள் பரவின.
இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த மிருணாள் தாகூர், “தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அஜய் தேவ்கனின் அழைப்பின் பேரில் அவர் அந்த விழாவிற்கு வந்திருந்தார். எங்களுக்குள் காதல் இருப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், தனுஷும் மிருணாள் தாகூரும் ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் புதிய தகவல்கள் பரவி வருகின்றன.
நடிகர் தனுஷ் ஏற்கனவே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து, 18 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்தச் சூழலில் தனுஷின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே நேரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மிருணாள் தாக்கூர் டேட்டிங் செய்து வருவதாக ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
