மத்தியப்பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டத்தில், திருமணமான பின்னரும் தனது காதலனுடன் சென்ற மகளைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்து, கடந்த மாதம் திருமணமான நிலையில், தனது உறவுக்கார காதலனுடன் ஊரை விட்டு வெளியேறி அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முனீஷ், மகளைத் தந்திரமாக கிராமத்திற்கு அழைத்து வந்து, பேச வேண்டும் எனக் கூறி தோட்டத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மகளைக் கொலை செய்த தந்தை முனீஷைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது விருப்பத்திற்கு மாறாகக் கணவனைப் பிரிந்து காதலனுடன் சென்றதால் மகளைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.