புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குப் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அந்தப் படத்தின் நாயகனான விஜய்யே மௌனம் காப்பது அவரது தைரியத்தைக் காட்டுகிறது என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அண்மையில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டது; அன்றைய மாணவர் பட்டாளத்தின் வீரத்தைச் சித்தரிக்கும் அந்தப் படம் வரலாற்றைப் பேசுகிறது” என்று குறிப்பிட்டார்.
மேலும், காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான தற்போதைய விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், இது ஒரு ஜனநாயக ரீதியான கருத்துப் பரிமாற்றமே தவிர, இதனால் கூட்டணிக்குள் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே தமிழகத்திற்கு அதிக வளர்ச்சித் திட்டங்கள் கிடைத்தன என்றும் சாடிய அமைச்சர், பிரதமர் மோடியோ அல்லது அமித்ஷாவோ எத்தனை முறை தமிழகம் வந்தாலும் மக்கள் மத்தியில் எந்த மாற்றமும் ஏற்படாது, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்று தனது பேட்டியில் தெரிவித்தார்.
