டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் ஜனவரி 23-ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் கூட்டணி குறித்த கேள்விக்கு, அவரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைப்பது குறித்துத் தேசியத் தலைவர்களே முடிவெடுப்பார்கள் என்று பதிலளித்தார்.

திமுக-வை வீழ்த்துவதே பொதுவான இலக்கு என்றாலும், முரண்பட்ட கருத்துடையவர்கள் ஒரே கூட்டணியில் இணைவது மக்களிடையே சரியான வரவேற்பைப் பெறாது என்றும், கூட்டணியில் ‘கெமிஸ்ட்ரி’ முக்கியம் என்றும் அவர் விளக்கினார்.

தமிழக அரசியலில் சீமான், விஜய் என யாரையும் லேசாக எடைபோட முடியாது என்றும், தற்போது நான்கு முனைப் போட்டியாகத் தெரிவது தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக மாறும் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் எல்.முருகன் இல்ல விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றதை ஆரோக்கியமான விஷயமாகப் பார்ப்பதாகவும், நடிகர்களின் சித்தாந்தத்தை அவர்கள் நடிக்கும் படங்களை வைத்து மட்டும் முடிவு செய்யக் கூடாது என்றும் அவர் கூறினார்.