நீலகிரி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஹெத்தையம்மன் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் தேர்தலில் நீலகிரி தொகுதிகளில் த.வெ.க.வே வெற்றி பெறும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கடந்த ஒரு வாரமாக வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கோத்தகிரி அருகே உள்ள பேரகணி கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலுக்குப் படுகர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய வெள்ளை உடை அணிந்து வந்து, காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், மேற்கு மண்டல அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் நேற்று பேரகணி கோவிலுக்குச் சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் பாரம்பரிய முறைப்படி காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது: “படுகர் இன மக்களின் மிக முக்கியமான நிகழ்வான ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று அம்மனின் அருள் பெறுவதற்காக வந்துள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 3 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் யாரைக் கைகாட்டுகிறாரோ, அவர்களே இந்த மூன்று தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெறுவார்கள்.”
இவ்வாறு அவர் கூறினார். மேலும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், த.வெ.க நிர்வாகியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
