கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாளையம் குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த காவலர் ஷேக் சலீம் (36) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தின்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்த ஷேக் சலீம், அப்பெண்ணுடன் அவ்வப்போது செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதை அறிந்த காவலர், அவரது வீட்டிற்கு நேரில் சென்று அப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிடவே, அங்கிருந்து தப்பியோடிய காவலர் குறித்துக் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் ஷேக் சலீமை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தினர். காவல்துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஷேக் சலீமை, துறை ரீதியான நடவடிக்கையாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அரவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலரே, தனியாக இருந்த பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்டு கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
