கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் சாமுவேல் சந்திரசேகர், தனது செல்போனுக்கு வந்த போலி RTO லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார். மர்ம நபர்கள் அவரது செல்போனை ஹேக் செய்து, கிரெடிட் கார்டு மூலம் சுமார் 16 லட்சம் ரூபாயைத் திருடினர்.

வங்கி குறுஞ்செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முதியவர், உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துத் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.புகாரைப் பெற்ற காவல்துறையினர் தனிப்படை அமைத்து, மோசடி கும்பல் பயன்படுத்திய லிங்க் மற்றும் வங்கி கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், மோசடி கும்பல் குஜராத் மாநிலம் சூரத்தில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்த தமிழக போலீசார், 10 பேர் கொண்ட அந்தப் பெரும் கும்பலை அதிரடியாகக் கைது செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இது போன்ற மோசடி லிங்குகளை அனுப்பி, அவர்களது வங்கிக் கணக்குகளைத் துடைப்பதே இவர்களது முழுநேர வேலையாக இருந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களது வங்கிக் கணக்கிலிருந்த 65 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் முடக்கினர்.

தமிழகத்திலிருந்து யாரும் தங்களைப் பிடிக்க வரமாட்டார்கள் என்று நினைத்திருந்த மோசடி கும்பலுக்கு, குஜராத் வரை சென்று கோவை போலீசார் வைத்த “ஆப்பு” பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துரித நடவடிக்கையின் மூலம் முதியவரின் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.