விஜய்யின் கடைசித் திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால், உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக முடியாமல் போனது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையீடு செய்துள்ளது.

​இந்த வழக்கின் விசாரணை நாளை (ஜனவரி 13) நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றம் படத்திற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கினால், உடனடியாகச் சென்சார் சான்றிதழ் பெறப்பட்டு வரும் ஜனவரி 14 அல்லது 15-ம் தேதிகளில் படம் திரையரங்குகளுக்கு வரும். அதே சமயம், தணிக்கைக் குழுவின் வாதங்கள் ஏற்கப்பட்டால் படத்தின் ரிலீஸ் இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகும். ஒருபுறம் ‘பராசக்தி’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் டெல்லியில் இருந்து வரும் அந்தத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.