சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், படத் தயாரிப்புத் தரப்பிற்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. இந்தப் படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் தேவ் ராம்நாத், விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுத் தங்கள் படத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தணிக்கைக் குழுப் பிரச்சினைகளைத் தாண்டி படத்தை வெளியிட்ட தங்களுக்கு, புக் மை ஷோ ரேட்டிங்கில் விளையாடுவது, திரையரங்குகளில் அரசியல் கோஷமிடுவது மற்றும் எதிர்மறை விமர்சனங்களைப் பரப்புவது போன்ற செயல்கள் மூலம் விஜய் ரசிகர்கள் முட்டுக்கட்டை போடுவதாக அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

​இதற்குப் பதிலடி கொடுத்துள்ள விஜய் ரசிகர்கள், தங்களது தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை முடக்கத் தயாரிப்புத் தரப்புப் பல சூழ்ச்சிகளைச் செய்ததாகத் திருப்பித் தாக்கியுள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியது, ‘மங்காத்தா’ ரீரிலீஸ் மூலம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் பார்த்தது எனப் பல புகார்களை அவர்கள் அடுக்கியுள்ளனர். மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் மொழி சார்ந்த விவகாரங்களையும் விமர்சித்துள்ள ரசிகர்கள், “படம் நன்றாக இருந்தால் யாராலும் தடுக்க முடியாது, உங்கள் தோல்விக்கு எங்களைப் பழிபோடாதீர்கள்” என ஆக்ரோஷமாகப் பதிவிட்டு வருகின்றனர்.