நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது.
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது. இறுதியில் 49 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியின் போது ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறியபோது, விராட் கோலி களத்திற்குள் வந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எழுப்பிய பலத்த கூச்சலும் ஆரவாரமும் சமூக வலைதளங்களில் விவாதமானது.
போட்டிக்கு பிந்தைய பேட்டியில் இதுகுறித்து விராட் கோலி பேசியதாவது:
“ஒரு வீரர் அவுட்டாகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் நுழையும் எனக்கு ரசிகர்கள் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுப்பது ஒருவிதத்தில் எனக்குப் பிடிக்கவில்லை. இதே போன்ற சூழலை தோனியும் அடிக்கடி எதிர்கொள்கிறார். ரசிகர்களின் அன்பையும் உற்சாகத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், ஆட்டமிழந்து வெளியேறும் ஒரு வீரருக்கு இது சற்று சங்கடத்தையே தரும் என நினைக்கிறேன்.” இவ்வாறு விராட் கோலி உருக்கமாகத் தெரிவித்தார்.
