இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமானால், நீங்கள் சாப்பிடும் இரவு உணவை விட காலை உணவில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊட்டச்சத்து நிபுணர் மகிஜா இது குறித்து விளக்குகையில், “உங்கள் இரவைப் பாதுகாக்க வேண்டுமானால், பகல் பொழுதைச் சரிசெய்ய வேண்டும்; காலையில் எடுத்துக்கொள்ளும் புரதச்சத்து நிறைந்த உணவு, இரவு நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு (Glucose) திடீரென அதிகரிப்பதைத் தடுக்கும்” என்கிறார். தூக்கத்தின் போது இன்சுலின் உணர்திறன் குறைவது மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் சர்க்கரை அளவு சீரற்றதாக மாறுவதைத் தடுக்க, காலையிலேயே உடலைத் தயார் செய்ய வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.
’இரண்டாம் உணவு விளைவு’ (Second Meal Effect) என்ற அறிவியலின்படி, காலையில் அதிக புரதம் சாப்பிடுவது அன்றைய தினத்தின் அடுத்தடுத்த உணவுகளின் போது இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. ஒரு ஆய்வில், காலை உணவில் புரதத்தை அதிகமாகச் சேர்த்தவர்களுக்கு, இரவு உணவிற்குப் பிறகு சர்க்கரை அளவு குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, காலை உணவில் 25 முதல் 35 கிராம் வரை புரதத்தைச் சேர்த்துக் கொள்ளவும், மதிய உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரவு உணவை ஒரு திருத்தமாகப் பார்க்காமல், அன்றைய தினத்தின் வளர்சிதை மாற்றத்திற்குத் துணையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
