கோவையில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

பாஜக சார்பில் இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குச் செல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைக்கு அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அது குறித்துப் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

பாமக கூட்டணியில் இணைந்துள்ளது குறித்துப் பேசிய அவர், அன்புமணி ராமதாஸ் வந்திருப்பது ஒரு பலமான தொடக்கம் என்றும், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது போல இன்னும் பல கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரத் தொடங்கும் என்றும் குறிப்பிட்டார்.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், சோமநாதபுரம் ஆலயத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 150 சிவாலயங்களில் சாந்தி பூஜை நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், ‘பராசக்தி’ திரைப்பட விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன், சென்சார் போர்டு தனது விதிமுறைகளின்படிதான் செயல்படுகிறது என்றார்.

படத்தில் அண்ணாவின் வசனங்கள் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை” என்று அவர் அதிரடியாகப் பதிலளித்தார்.

தணிக்கைக் குழு சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.