சினிமா உலகில் துணிச்சலான கருத்துக்களைப் பேசுவதற்குப் பெயர்பெற்றவர் நடிகை பார்வதி திருவோத். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனது பால்ய வயதில் நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவர் சிறுமியாக இருந்தபோது, ஒருமுறை ரயில் நிலையத்தில் தனது பெற்றோருடன் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு மர்ம நபர், எதிர்பாராத விதமாக பார்வதியின் மார்பில் பலமாக அடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

“அந்தத் தருணத்தில் நான் மிகவும் சிறிய பெண், அது எனக்கு தாங்க முடியாத வேதனையைத் தந்தது” என பார்வதி கண்கலங்கத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, வெளியில் செல்லும்போதெல்லாம் ஆண்களின் கைகளில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று தனது அம்மா தன்னிடம் கூறியதாகவும், அப்படியே தான் வளர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவயதிலேயே பெண்களுக்கு நேரும் இத்தகைய பாலியல் அத்துமீறல்கள் அவர்களின் மனதை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதற்குப் பார்வதியின் இந்தப் பேச்சு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.