நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம், வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடன் விவகாரத்தில் நீதிமன்றத் தடை நீடித்து வந்த சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டியிருந்தது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ. 10.35 கோடி கடனை, வட்டியுடன் சேர்த்து ரூ. 21.78 கோடியாகத் திருப்பிச் செலுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தொகையைச் செலுத்தும் வரை படத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. சமீபத்தில், ரூ. 3.75 கோடியைச் செலுத்தத் தயாராக இருப்பதாகக் கூறி தடையை நீக்கக் கோரி தயாரிப்புத் தரப்பு முறையிட்டது. ஆனால், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், சி. குமரப்பன் அமர்வு இதனை ஏற்க மறுத்தது. போதிய கால அவகாசம் வழங்கியும் பணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி, படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத் தடை மற்றும் சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், பொங்கல் பண்டிகை அன்று படத்தை வெளியிடுவதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். சட்டச் சிக்கல்களைச் சுமுகமாக முடித்துவிட்டு, திட்டமிட்டபடி ஜனவரி 14 அன்று ‘வா வாத்தியார்’ திரைக்கு வரும் என தற்போது அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.