சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ரவி மோகனின் நடிப்பு குறித்து அவரது தோழியும் பாடகியுமான கெனிஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஹிந்தித் திணிப்பு விவகாரத்தை மையக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று காலை படம் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை வடபழனியில் உள்ள காசி திரையரங்கில் நடிகர் ரவி மோகனுடன் இணைந்து பாடகி கெனிஷா இப்படத்தைப் பார்வையிட்டார்.

திரைப்படம் முடிந்து வெளியே வந்த கெனிஷா, செய்தியாளர்களிடம் பேசுகையில் ரவி மோகனின் நடிப்பை வெகுவாகப் புகழ்ந்தார். அவர் கூறியதாவது: “பராசக்தி திரைப்படம் ரவிக்காகவே ஓடும். படத்தில் அவரது நடிப்பு அபாரமாக உள்ளது. என் கண்ணுக்கு அவரைத் தவிர வேறு யாருமே தெரியவில்லை. அவர் இந்தப் படத்தில் நாயகனாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும் சரி… அவர்தான் முதன்மையானவர். குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில் அவரைத் தவிர வேறொன்றுமே இல்லை எனும் அளவிற்கு ஆளுமை செய்துள்ளார். ரவி எப்போதுமே ‘எவர்கிரீன்’ மற்றும் ‘எவர் பெஸ்ட்’ கலைஞர்.” என்றார்.

பேட்டியின் இறுதியில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்தும் கெனிஷா தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். “விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகிறதோ, அன்றுதான் தமிழ் மக்களுக்கு உண்மையான பொங்கல்,” என்று அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் தற்போது கெனிஷாவின் இந்தப் பேட்டி வைரலாகி வருவதோடு, திரைத்துறை வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.