மும்பை புனித ஜூட்ஸ் பள்ளியின் 1974-ஆம் ஆண்டுக்குரிய பழைய பள்ளிக் கட்டண அட்டை ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகி, இன்றைய பெற்றோர்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அந்தக்காலத்தில் ஒரு மாதத்திற்கான ஆரம்பப் பள்ளிக் கட்டணம் வெறும் 12 ரூபாய் மட்டுமே என்பது அந்த அட்டையின் மூலம் தெரியவந்துள்ளது.
தட்டச்சு முறையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, கைகளால் எழுதப்பட்ட கையொப்பங்களைக் கொண்டுள்ள அந்த அட்டை, கல்விச் செலவு மிகக் குறைவாக இருந்த ஒரு எளிய காலத்தை நினைவூட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில், மும்பையில் ஒரு வருடத்திற்கான பள்ளிக் கட்டணம் சுமார் 20 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 1.70 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தரமான கல்வி என்பது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவருவதை இந்த பழைய கட்டண அட்டை சுட்டிக்காட்டுவதாக சமூக வலைதளவாசிகள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
