வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.), அக்கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான பிரத்யேகக் குழுவை அமைத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மக்களின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள், தொழிலாளர் அமைப்புகள், விவசாயிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வணிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும், கருத்துகளையும் தரவுகளாகப் பெற உள்ளது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலான முழுமையான தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். இக்குழுவினருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 அம்ச ‘மினி’ தேர்தல் வாக்குறுதிகளை விஜய் கோடிட்டுக் காட்டியிருந்தார். அதில்: அனைவருக்கும் நிரந்தர வீடு. வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பொருளாதார மேம்பாட்டின் மூலம் கார் வாங்கும் வசதி. குடும்பத்தில் ஒருவருக்குப் பட்டப்படிப்பு மற்றும் நிரந்தர வருமானம். அரசு மருத்துவமனைகள் மேம்பாடு மற்றும் கல்விச் சீர்திருத்தம். மீனவர்கள், நெசவாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.
அடுத்தகட்டப் பிரசாரமாக சேலம் அல்லது தர்மபுரியில் விஜய் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில், கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த அவர் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
த.வெ.க. தலைமையில் பலமான கூட்டணியை அமைக்கவும் மறைமுகப் பணிகள் தொடங்கிவிட்டன. இதற்காக தே.மு.தி.க., அ.ம.மு.க., மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்டணி உறுதியானதும், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விஜய் ஒரே மேடையில் தோன்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
