கடலூர் அருகே வேப்பூர் பகுதியில் நடைபெற்ற தேமுதிகவின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில், விஜயகாந்தின் நேர்மையான அரசியலைத் தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகக் குறிப்பிட்ட விஜய பிரபாகரன், பேரம் பேசுவதாக தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். உதயநிதி, விஜய் போன்ற இளந்தலைவர்கள் பட்டியலில் தன் பெயர் விடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், தேமுதிக எந்தப் பக்கம் இருக்கிறதோ அதுவே வலிமையான “மெகா கூட்டணி” என்றும், தங்களின் உதவி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அதிரடியாகப் பேசினார்.
குறிப்பாக, நடிகர் விஜய்க்கு தம்பி என்ற முறையில் அவர் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கினார். ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் காங்கிரஸார் காட்டும் ஆதரவு, அவரைத் தங்கள் பக்கம் இழுக்கப் போடும் “தூண்டில்” என்றும், அந்த வலையில் சிக்கிவிட வேண்டாம் என்றும் எச்சரித்தார். மேலும், பிரேமலதா விஜயகாந்த் கோவிலில் உடைத்த சூரைத்தேங்காய் இரண்டாகப் பிளந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இது தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தேமுதிகவின் தேவை இருப்பதை உணர்த்தும் கடவுளின் அறிகுறி என்று தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையுடன் பேசினார்.
