விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ள நிலையில், இது குறித்து பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தணிக்கை வாரியம் இந்தப் படத்தை மட்டும் வேண்டுமென்றே நிறுத்தவில்லை என்றும், இதற்கு முன்பே ‘தக் லைஃப்’ போன்ற பல படங்களுக்கு இதுபோன்று நடந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் விஜய்யின் ‘தலைவா’ படத்திற்கு இதே போன்ற சிக்கல் ஏற்பட்டபோது விஜய் அமைதியாகத்தானே இருந்தார் என்று சரத்குமார் கேள்வி எழுப்பினார்.
அனைத்துமே அரசியல் ரீதியாகத்தான் நடக்கிறது என்ற எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அரசியல் தலைவராக இருப்பதால் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருப்பதாகவும், தான் நடித்த ‘அடங்காதே’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லையே என்றும் சரத்குமார் குறிப்பிட்டார்.
தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த விவகாரத்தால், பொங்கல் பண்டிகைக்கு இந்தப் படம் வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
