கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைவாரா அல்லது கட்சியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்குச் சுத்தமாக வாய்ப்பு இல்லை; அதேபோல் அவர் மீண்டும் கட்சியில் இணைவதற்கும் இடமே இல்லை” என்று மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துவிட்டார்.
ஏற்கனவே பலமுறை இதே கருத்தைச் சொல்லியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஓபிஎஸ் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓபிஎஸ் தரப்புடன் சமரசம் ஏற்படும் என்று நிலவி வந்த வதந்திகளுக்கு இந்தப் பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடிப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
