தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறை ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது.
இதற்கு தி.மு.க. உடன்படாத நிலையில், ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால் அந்த இடத்தைத் தே.மு.தி.க.வை கொண்டு நிரப்ப தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
இதற்காக தே.மு.தி.க.வுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாகவும், இது குறித்து இரு கட்சிகளிடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து அதிருப்தியால் வெளியேறிய தே.மு.தி.க., தனது அடுத்தகட்ட முடிவை வரும் 9-ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிக்க உள்ளது. காங்கிரஸ் வெளியேறினால் மிஞ்சும் தொகுதிகளைத் தே.மு.தி.க.வுக்கும், கூடுதல் சீட் கேட்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, அதிக இடங்களில் தாங்களே நேரடியாகப் போட்டியிட தி.மு.க. கணக்கு போடுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒருபுறம் சவாலாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் எடுக்கும் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள தி.மு.க. தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
