ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள ரூபாலி சதுக்கம் பகுதியில் கடந்த ஜனவரி மூன்றாம் தேதி நிகழ்ந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷ்ணு பாட்ரோ உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது பின்னாலிருந்து வந்த அதிவேக அரசுப் பேருந்து மோதியதில், அந்த ஆட்டோ முன்னால் நின்றிருந்த பள்ளிப் பேருந்துக்கும் அரசுப் பேருந்துக்கும் இடையில் நசுங்கியது.

 

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த நமிதா பிரதான் மற்றும் ரமணி நாயக் ஆகிய 2 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் சுசித்ரா குமார் சாஹூவை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 5000 ரூபாயும் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளைச் சேதப்படுத்தி மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.