சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று (ஜனவரி 7, 2026) ஒரு கிராம் தங்கம் விலை ₹40 உயர்ந்து ₹12,870-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் விலை ₹320 அதிகரித்து, முதல்முறையாக ₹1,02,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. புத்தாண்டுத் தொடக்கத்தில் சற்று குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் ஒரு லட்சத்தைத் தாண்டியிருப்பது நகை வாங்குவோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரகால விலை நிலவரத்தைப் பார்க்கும்போது, தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஆறு நாள்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ₹3,440 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாகவே இந்த அதிரடி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.