தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டணியை மேலும் வலுப்படுத்த அதிமுக முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜனவரி 7, 2026) சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரைச் சந்திக்க உள்ளார். இந்தக் கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் அண்மையில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பிளவுகளுக்கு மத்தியில், அன்புமணியின் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஒருபுறம் காடுவெட்டி குருவின் மகள் புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் தனது செல்வாக்கை நிரூபிக்க அன்புமணி பலமான கூட்டணியை எதிர்நோக்குகிறார். அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவும் இணையும் பட்சத்தில், அது வரும் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பலத்த சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.
